சாலையோரங்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு நீதிமன்றம் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம், கடந்த ஜூலையில் காவல்துறை டிஜிபிக்கு ஓர் உத்தரவை பிறப்பித்தது.
மனநலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி உத்தரவிட்டு அதனை 6 மாதத்துக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியது.
திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிப் பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக சுற்றுலா இடங்களான ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.
இவர்கள், சில நேரங்களில் ஆடையின்றி அலைவது பார்ப்பவர்களை வேதனையடையச் செய்கிறது. இவர்களில் மனநலம் பாதித்த பெண்களும் விதிவிலக்கு அல்ல.
அரசு மருத்துவமனைகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் பலர் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் சாலைகளில் செல்லும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றனர்.நோயால் ஒரே இடத்தில் பல நாள்கள் கிடந்து சிலர் இறக்கின்றனர். இவ்வாறு இறந்தவர்களை போலீஸôர் மீட்டு அனாதை பிணமாக அடக்கம் செய்கின்றனர்.
மனநலம் பாதித்தவர்களில் சிலர் நீண்டதொலைவுக்கு நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும்போது இரவில் வாகனங்கள் மோதி இறக்கின்றனர். அடுத்து சாலையில் வரும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சடலத்தில் ஏறிச் செல்வதால் கடைசியில் சடலம் சிதைந்து அடையாளம் தெரியாமல் ஆகிவிடுகிறது.
மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப நிலையில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் 90 சதம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இவர்களை யார், எப்படி மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பது என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்னை.
காவல்துறையால் மட்டும் இதனைச் செய்துவிட முடியாது. தொண்டு நிறுவனங்கள் முழுமையாக இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் இவர்களைப் பற்றி மாவட்டவாரியாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் தெரிய வரும்.
இன்றைய சூழ்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மனநோயாளிகளாகத் திரிவதை பார்க்க முடிகிறது.
தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து மனநலம் பாதித்தவர்களை போலீஸôர் மீட்க வேண்டும். மீட்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் மூலம் மனநலப்பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
குணப்படுத்தக்கூடிய தன்மையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் தனி வார்டு ஒதுக்கி சிகிச்சை அளிக்கலாம்.
ஏனைய மனநலம் பாதித்தவர்களை சென்னை கீழ்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கலாம்.
மனநோயாளிகளை கையாளுவது என்பது சற்று கடினம் என்றாலும் மனிதநேயத்துடன் இதைச் செய்ய வேண்டும்.
மருத்துவமனைகளில் இதற்கென தனியாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். வார்டுகள் தனியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு அரசின் நிதிஒதுக்கீடு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.
மனநலம் பாதித்தவர்களை மீட்க நீதிமன்றம் அக்கறையுடன் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் அனைத்துத் துறைகளும் கைகோர்த்து இதனைச் செய்வதுதான் மனிதநேயச் செயலாகும்.
No comments:
Post a Comment